Tuesday, September 20, 2011

சீக்கிரமாய் வா!


முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா!
பக்தர்க் கருளும் சக்திக் கொழுந்தே
சரவண பவனே வா!

வண்ண மயிலேறி வாகாய் அமர்ந்து
சின்னக் குமரா வா!
சின்னக் குழந்தை வடிவில் ப்ரணவ
பொருள் சொன்னவனே வா!

விண்ணும் மண்ணும் வியந்தே போற்றும்
வடிவே லவனே வா!
கண்ணும் மனமும் கசியத் துதித்தோம்
கண்ணின் மணியே வா!

கன்னல் தமிழில் கவிதை சொல்வேன்
செல்லக் குமரா வா!
மின்னல் போலே எம்மைக் காக்க
விரைந்தே நீயும் வா!

சொல்லும் கவியில் சொல்லாய் பொருளாய்
சுவையாய் அமைவாய் வா!
கல்லும் கனியும் தமிழின் சுவையில்
கனிந்தே நீயும் வா!

சரவண பவனே சண்முக குகனே
சடுதியில் இங்கே வா!
சங்கரன் மகனே சங்கடம் தீர்க்க
சீக்கிரமாய் நீ வா!


--கவிநயா

ஒவ்வொரு பத்திக்கும் பிறகு,

"முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா"

என்கிற வரிகளை குழுவினர் இரண்டு முறை பாடலாம்.

No comments:

Post a Comment

வாங்க, வணக்கம்!