Monday, November 22, 2010

ஓம் சக்தி ஓம்!


மூவாறு கரங்களுடன்
முகம்பொழியும் கருணையுடன்
மூவுலகும் காக்க வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சேலாடும் விழிகளுடன்
நூலாடும் இடையினுடன்
எண்திசையும் வெல்ல வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வேல்விழிகள் பளபளக்க
கோபத்திலே ஜொலிஜொலிக்க
வேகம்மிகக் கொண்டு வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீரமகள் வந்தணைக்க
வெற்றிமகள் சேர்ந்திருக்க
மகிஷன்சிரம் அறுத் தெறிந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

காளியென நீலியென
கனிவுமிகும் அன்னையென
காப்பாற்ற வந்தவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சண்டியென சூலியென
சடுதியிலே வந்துஎங்கள்
சங்கடங்கள் தீர்ப்பவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

ஓமென்று உன்நாமம்
ஓயாமல் உரைத்திருந்தால்
ஓடோடி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீணென்று இப்பிறவி
ஆகாமல் இக்கணமே
விரைந்தேகி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!


--கவிநயா

பி.கு. ஏற்கனவே அம்மன் பாட்டில் இட்ட பாடல். ஆனால் பஜனைக்கு நல்லாருக்கும்னு தோன்றியதால் இங்கேயும் சேமித்து வைக்கிறேன்...

Sunday, November 14, 2010

காவடியாம் காவடி!


காவடியாம் காவடி கந்தவேலன் காவடி
கண்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்குக் காவடி
வேல்முருகன் நாமத்திலே விதவிதமாய்க் காவடி
வெற்றிவேலன் காவடி வீரவேலன் காவடி
சிங்கார வேலனுக்குச் சின்னச்சின்னக் காவடி
வண்ணமயில் தோகையோடு ஆடிவரும் காவடி
பழநிமலைப் பாலனுக்குப் பாற்குடத்தால் காவடி
தென்பழநி வேலனுக்குத் தேன்குடத்தால் காவடி
சாமிநாத வேலனுக்குச் சந்தனத்தால் காவடி
பாலசுப்ர மண்யனுக்குப் பஞ்சாமிர்தக் காவடி
ஆறுமுக வேலனுக்கு அழகுமயில் காவடி
வண்ணவண்ணக் காவடி வெற்றிவேலன் காவடி
மாயூர நாதனுக்கு மச்சத்தால் காவடி
குன்றக்குடிக் குமரனுக்குக் குறைவில்லாத காவடி
பக்தரெல்லாம் கொண்டாடும் பழநிவேலன் காவடி
பாமாலை பாடியாடி நாடிவரும் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும் கந்தவேலன் காவடி
காவடியாம் காவடி காணவேண்டும் கண்கோடி!

Monday, November 8, 2010

ஓம் நமசிவாய ஓம்!



ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்

இமயத்தின் முடியில் உமையுடன் இருப்பான்
ஓம் நம சிவாய ஓம்
இதயத்தில் இருத்த இன்பங்கள் அளிப்பான்
ஓம் நம சிவாய ஓம்

அண்டங்கள் அசைய அவன்நட மிடுவான்
ஓம் நம சிவாய ஓம்
தண்டைகள் இசைய திருநடம் புரிவான்
ஓம் நம சிவாய ஓம்

ஒருசிரிப் பினிலே முப்புரம் எரித்தான்
ஓம் நம சிவாய ஓம்
எரிநெருப் பினிலே முருகனை அளித்தான்
ஓம் நம சிவாய ஓம்

தென்மு கமாக தவத்தினில் இருப்பான்
ஓம் நம சிவாய ஓம்
சண் முகனிடத்தில் மந்திரம் கேட்டான்
ஓம் நம சிவாய ஓம்

காமனை எரித்தான் கங்கையைத் தரித்தான்
ஓம் நம சிவாய ஓம்
கண்மணி உமையை இடத்தினில் வரித்தான்
ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://aboutshiva.com/about_shiva_home.html