Monday, September 9, 2013

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!

ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை முன்பு ஒரு முறை எம்.எஸ். அம்மாவின் பாடலோடு பதிவு செய்திருந்தேன். அப்போது, இதனைப் பொருளோடு எழுதினால் உதவியாக இருக்குமே என்று அறிவன் குறிப்பிட்டிருந்தார். இப்போதுதான் அதற்கு விநாயகர் மனம் வைத்திருக்கிறார்.

தமிழில் அதே மெட்டில் பாடலாகவே எழுத முயற்சித்திருக்கிறேன். குற்றம் குறைகள் இருந்தால் பிள்ளையாரும் அவர் பிள்ளைகளும் (நீங்கதாங்க!) மன்னித்தருள வேண்டும்.

வட மொழி வரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தமிழ் வரிகளாக வந்திருக்கிறது. நீங்களும் பாடிப் பாருங்களேன்!


ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்


முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!
பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!
போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!
தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!
தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!
நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்


உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!
உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!
தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!
ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!
உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!
யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!
தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!
தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!


ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்


அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!
அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!
பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!
யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!
பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!
பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!
பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!


அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்


ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!
அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!
திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!
தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!
காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!
விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!
முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!
மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!


மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!
பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!
ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்
ஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே!--கவிநயா 

விக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.


பொருள் உதவிக்கு நன்றி: http://visvacomplex.com/ganesa_pancharathnam.html


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான விளக்கம்... நன்றி...

அம்பாளடியாள் said...

சிறப்பான பகிர்வு .மனம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தோழி .

Kavinaya said...

இங்கும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி, தனபாலன், அம்பாளடியாள்!

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை பொருளோடு அருமையான பாடலாக்கித் தந்தமைக்கு இனிய பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_6058.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Kavinaya said...

போன வருஷம் விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு இப்போதான் வந்தேன். இராஜராஜேஸ்வரி அம்மா, மற்றும் தனபாலன், உங்க வருகைக்கு மிகவும் நன்றி. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

sarvan said...

மிக்க மகிழ்ச்சி .... பஜனை பாடல்லாஸ் தமிழில் நன்றாக இருக்கு.....
தொடர்ந்து எழுதவும்

Post a Comment

வாங்க, வணக்கம்!