Monday, January 9, 2012
அடைக்கலம் நீயே!
அம்மா சரணம் அம்மா சரணம்
அம்பிகை யேஉன் பதம்சரணம்
அன்பின் வடிவே அருளின் பொருளே
அடைக்கலம் நீயே அருள்சரணம்
பாலை வடிவாய் விளங்கும் தாயே
பாலாம் பிகையே பதம்சரணம்
பாலை யெல்லாம் சோலை யாக்கும்
வசந்தம் நீயே வாசரணம்
காமனை எரித்த காமேச் வரனை
கண்ணால் ஆள்பவ ளேசரணம்
காமங்கள் எரித்து கனிவுடன் எமையும்
காப்பாய் காமேச் வரிசரணம்
இதழில் கனியும் புன்னகை யாலே
இதயம் கவர்பவ ளேசரணம்
மதகை மீறிப் பெருகும் அன்பில்
மகிழ்ந் தாடும்மா தேசரணம்
இல்லை என்றே சொல்லா தெதையும்
அள்ளித் தருபவ ளேசரணம்
தொல்லை எதுவும் இல்லாமல் எமை
தொடர்ந்தே காக்கும் தாய் சரணம்
ஆயிர மாயிரம் நாமங்கள் விளங்கும்
அதிசய வடிவுடை யாய்சரணம்
அதிலொரு நாமம் சொன்னால் கூட
அகமகிழ்ந் தருளிடு வாய்சரணம்
அம்மா என்று சொல்லும் போதே
அகஇருள் விலகிடு மேசரணம்
சும்மா உன்னை நினைத்தால் கூட
சுகம்மிக வாகிடு மேசரணம்
அம்மா சரணம் அம்மா சரணம்
அம்பிகை யேஉன் பதம்சரணம்
அன்பின் வடிவே அருளின் பொருளே
அடைக்கலம் நீயே அருள்சரணம்!
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பாடுறதுக்கு ரொம்ப சுளுவா இருக்கு.
நன்றி குமரன் :)
Post a Comment
வாங்க, வணக்கம்!